’இந்து சமுத்திர வலயத்தை கேந்திர நிலையமாக மாற்றவேண்டும்’
இந்து சமுத்திர வலயத்தை அமைதியான வலயமாக மாற்றி, ஒட்டு மொத்த மானிட சமூகத்தின் எதிர்கால வளர்ச்சிக்காக செயற்படும் கேந்திர நிலையமாக மாற்றவேண்டும் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
அலரி மாளிகையில் நேற்று (01) பிற்பகல் இடம்பெற்ற 2017ஆம் ஆண்டின் இந்து சமுத்திர வலய மாநாட்டின் இறுதி நாள் நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
பூகோள ரீதியில் இந்து சமுத்திரத்தின் மிக முக்கியமான கேந்திர ஸ்தானத்தில் அமைந்துள்ள இலங்கையின் அமைவிடம், வலயத்தின் பொருளாதார, கடற்படை செயற்பாடுகளுக்கும் மட்டுமன்றி ஒட்டுமொத்த மானிட சமூகத்தின் சௌபாக்கியத்துக்கும் அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள மிக முக்கியமாகும் என்று தெரிவித்த ஜனாதிபதி, ஆன்மீக ரீதியில் வளர்ச்சியடைந்த சிறந்த சமூகமாக நவீன தொழில்நுட்பங்களுடன் இணைந்து முன்னோக்கி செல்வதற்கு இலங்கை அனைத்து சகோதர நாடுகளுடனும் அமைதியுடனும், நட்புடனும் கைகோர்க்கின்றது என்றும் தெரிவித்தார்.
ஒட்டுமொத்த மானிட சமுதாயத்தின் நன்மைக்கும் சமுத்திரம் ஏதுவாக அமைவதுடன், மனிதர்களின் தவறான நடத்தைக்கும் இன்று சமுத்திரப் பரப்புக்கள் உபயோகிக்கப்படுகின்றன என்று தெரிவித்த ஜனாதிபதி, அமைதியை சீர்குழைக்கும் யுத்த நடவடிக்கைகள், போதைப் பொருள் கடத்தல்கள் மற்றும் ஆட்கடத்தல் நடவடிக்கைகளுக்கு சமுத்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றமை தொடர்பாக இந்த மாநாட்டில் கலந்துகொண்ட அனைவரின் கவனமும் செலுத்தப்பட்டிருக்கும் என தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.
இந்து சமுத்திர வலயத்தில் அமைந்துள்ள அனைத்து நாடுகளும் தேசிய நல்லிணக்கம் மற்றும் அமைதியை மதித்து செயற்படுகின்ற அதேவேளை சர்வதேச ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தை உறுதி செய்வதற்கும் அர்ப்பணிப்புடன் காணப்படுகின்றன என்று தெரிவித்த ஜனாதிபதி, உலகின் முதலாவது பெண் பிரதமரான சிறிமாவோ பண்டாரநாயக்க அம்மையார் 1960ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையின் மாநாட்டில் இந்து சமுத்திர வலயத்தை அமைதியான வலயமாக மாற்றுவதற்காக தெரிவித்த முன்மொழிவை இதன்போது நினைவுகூர்ந்தார்.
அண்மையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சமுத்திர வலயங்களின் முக்கியத்துவம் தொடர்பாக தெரிவித்த முன்மொழிவுகளையும் ஞாபகப்படுத்திய ஜனாதிபதி, இந்து சமுத்திர வலயத்தின் பாதுகாப்புக்கான சகல நாடுகளினதும் ஒத்துழைப்பை மீண்டும் வலியுறுத்தினார்.
’இந்து சமுத்திர வலயத்தை கேந்திர நிலையமாக மாற்றவேண்டும்’
Reviewed by Tamil Sri Admin
on
September 02, 2017
Rating:
Reviewed by Tamil Sri Admin
on
September 02, 2017
Rating:




